ஈரோட்டில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் மலை கிராமம் கொங்காடை. பர்கூர் மலைப்பகுதியில் கடைக்கோடி கிராமமான அவ்வூரை, அண்மையில் தான் பேருந்தே எட்டிப் பார்த்துள்ளது. மலைமுகடுகளும்,  பசுமை போர்த்திய காடுகளும் சூழ்ந்த இந்த பகுதியில் ஊராளி பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கல்வி பெறாத பழங்குடியின குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி வந்தனர். இந்த நிலையை மாற்றி அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு சுடர் அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாலர் சிறப்புப் பள்ளி கொங்காடை கிராமத்தில் அமைக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்த பள்ளியில் 2 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டது. கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அச்சூழலில் பள்ளிக்கூடம் கட்ட இடம் தேடிய போது, அப்பகுதியை சேர்ந்த சடையன் என்ற 75 வயது முதியவர் தனது நிலத்தை தானமாக வழங்க முன்வந்தார்.




“நா தா படிக்கல. நம்ம வூரு குழந்தைக படிச்சு மேல வரட்டும்” என தனது 10 செண்ட் நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட வழங்கினார். இதற்கும் அவர் மிகச்சிறிய அளவிலான குடிசையில் வசித்து வந்த போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி தனது நிலத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்கினார். இதையடுத்து 3.5 இலட்ச ரூபாய் செலவில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவியுள்ளது. 




இதனிடையே  சடையனின் உதவிக்கு கைமாறு செய்யும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வீடு கட்டித் தர முடிவு செய்தனர். இதன்படி அவரது குடிசைக்கு அருகே பல்வேறு கொடையாளர்கள் உதவியுடன் 3 இலட்ச ரூபாய் மதிப்பில் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டிற்கு பழங்குடியின போராளி ’பிர்சா முண்டா இல்லம்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை நேற்று திமுக துணை பொதுச்செயலாளர்  சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த வீடு சடையனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பேசிய சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், “சடையன் தாத்தா 6*8 என்ற அளவிலான சிறிய குடிசையில் வசித்து வந்தார். அந்த குடிசைக்குள் ஒருபெரிய கரையான் புற்று இருந்தது. அதனை ஏன் இடிக்கவில்லை எனக் கேட்டதற்கு ‘அதுக்குள்ள உயிரு இருக்கு’ என ஆச்சரியப்படுத்தினார். இப்படி இயற்கையை சிதைக்காமல் வாழ்வது தான் பழங்குடிகளின் இயல்பு. 




பொதுவாக அனைத்து மக்களுக்கும் மண் மீது அதிக பாசம் இருக்கும். அவ்வளவு எளிதாக நிலத்தை தரமாட்டார்கள். ஆனால் சடையன் தாத்தவிற்கு 5 வாரிசுகள் இருந்த போதும், பள்ளிக்கூடம் கட்ட நிலம் தனது நிலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிலத்தை தந்தார். இந்த பள்ளிக்கூடத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர். இரண்டு பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.  சடையன் தாத்தா வசிக்கும் வீடு எங்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. அதனால் கொடையாளர்கள் உதவியுடன் வீடு கட்டி சடையன் தாத்தாவிடம் வழங்கியுள்ளோம். இது எங்களுக்கும், சடையன் தாத்தாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்தார்.