மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமான இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன. சுற்றுலா தலங்களை காணவும், வனப்பகுதியில் வன விலங்குகளை காணவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பயணமாக ஜிப்லைன் சாகச பயண திட்டம் அறிமுப்படுத்தப்பட உள்ளது.


கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட நாடுகாணியில் ஜென்புல் என்ற சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு தாவர மரபியல் பூங்கா, அரிய வகை தாவரங்கள், ஆரல் மீன் காட்சியகம், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்களை கொண்ட அருங்காட்சியகம், இயற்கை பள்ளத்தாக்குகள் கொண்ட காட்சி முனை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க செல்ல வாகன வசதிகள் ஆகியவையும் உள்ளன. இதற்கிடையில் இங்கு சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜிப் லைன் சாகச பயணம் திட்டம் கொண்டுவர முடிவு செய்து, அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.




இந்த நிலையில் அதற்கான பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. தாவர மரபியல் பூங்காவின் புல்வெளிகள், இயற்கை அழகு மலைத் தொடர் காட்சிகளை பார்த்து ரசிக்கும் வகையில் சுமார் 550 மீட்டர் தூரத்திற்கு ஜிப் லைன் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிக்க இந்த ஜிப் லைன் சாகச பயணம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே அப்பகுதியில் ஜிப் லைன் சாகச பயணம் போன்ற சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கு சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனித - வனவிலங்குகள் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதலில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வனவிலங்குகள் மனிதர்களிடையே உள்ள மோதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். பிறகு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதை பற்றி ஆலோசிக்கலாம். அடிக்கடி வனவிலங்குகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை காணாமல் சுற்றுலாவை மேம்படுத்தி, அதில் பணம் பார்க்க நினைப்பது எந்த வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.