தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலான விளம்பரங்கள், பதாகைகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன் குமார் தலைமையில், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி, மாநகராட்சி அலுவலகங்கள், அரசு துறைகள் மற்றும் முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசு விளம்பரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ விதிமீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தேர்தல் பிரச்சார வாகனங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றிற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தற்போது தேர்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
