பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கும் வாழ்க்கையில் உயர்ந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில், காப்பகங்களில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்னை முதல் கோவை வரை விமானத்தில் பயணம் செய்து அறிவியல் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

எளிய பின்னணியில் இருந்து வரும் இந்த மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில், தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து “Flight of Fantasy” என்ற திட்டத்தை செயல்படுத்தின. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு பெற்றனர். பலருக்கும் இது வாழ்க்கையில் முதல் விமானப் பயணமாக இருந்ததால், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்தனர்.

வாழ்க்கையில் உயர பறக்க கற்ற குழந்தைகள்

Continues below advertisement

சென்னை நகரில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் கோவை வந்தடைந்தனர். கோவை வந்த பிறகு மாணவர்கள் நகரில் உள்ள பல்வேறு கல்வி மற்றும் அறிவியல் தொடர்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி,  ஜிடி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம், மண்டல அறிவியல் மையம் உள்ளிட்ட இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், வனவியல் பொருட்கள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

ஏழை மற்றும் பின்தங்கிய சூழலில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் பெரிய கனவுகள் காணும் தைரியம் வர வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த பயணத்தின் போது குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தங்களுக்கு பெரும் திருப்தி அளித்ததாகவும், இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.