கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மூன்று கோடியே 54 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லப்படும் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது AMBEE express நிறுவனம். கோவையில் தயாராகும் தங்க நகைகளை விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியினை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை ராமநாதபுரம் பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக AMBEE express நிறுவனத்தின் வாகனத்தினை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.




தங்க, வைர நகைகள் பறிமுதல்


அப்போது அதில் தங்க கட்டி மற்றும் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவற்றிக்கான  உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அந்த வாகனத்தையும், அதிலிருந்த தங்க, வைர நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அவற்றை அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் மணிமேகலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் பறக்கும் படை அதிகாரிகள் பெர்க்ஸ் ஸ்கூல் ஜங்ஷன் பகுதியில் சோதனை நடத்தியபோது தங்கம் மற்றும் வைர நகைகளுடன் வந்த வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது எனவும்,  இதன் சுமாரான மதிப்பு 3  கோடி 54 லட்ச ரூபாய் எனவும் தெரிவித்தார்.


பறிமுதல் செய்யப்பட்ட தங்க மற்றும் வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும், தங்கம் மற்றும் வைர நகைகளின் சுமாரான மதிப்பு மட்டுமே தற்போது சொல்லப்பட்டுள்ளது எனவும் நகைகளை மதிப்பிடும் பணியானது நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  தனியார் நிறுவனத்தினர்  உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்கம் மற்றும் வைர நகைகள் எங்கியிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது, அது யாருடையது உள்ளிட்டவை குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3.54 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.