கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். கருப்பு சட்டை அணிந்தபடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.


இப்போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மக்கள் வயிற்றெரிச்சல், கோபத்தை இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர். 18 மாத திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நன்மை நடந்துள்ளது? என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 




ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். திறமையில்லாத முதலமைச்சர். ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு 18 மாத கால ஆட்சியே சான்று. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. கார்பரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழகத்தை ஆட்சி செய்கிறது. 


10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. அவர் கோவைக்கு வரும் போது யாராவது கண்ணாடி வாங்கிக் கொடுத்து அனுப்புங்கள். கோவையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதனை அவர் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அதிமுக பற்றி பேசும் யோக்கியதை முதலமைச்சருக்கு கிடையாது. அதிமுகவை விமர்சிக்க முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது?




நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு, அவர்கள் பெயர் வைக்கிறார்கள். 18 மாத கால திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.


சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தி, மக்கள் மீது சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. 53 சதவீதம் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படிப்படியாக உயர்த்தலாம். இதனால் தொழில் வளம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றிவிட்டார்கள். கம்பி, சிமெண்ட் விலை உயர்வால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும்.




அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போட்டுவிட்டால் எங்களை முடக்கிவிட முடியுமா? அதிமுகவினரை முடக்க ஒரு ஸ்டாலின் அல்ல இன்னும் ஓராயிரம் ஸ்டாலின்கள் பிறந்து வந்தாலும் முடியாது. இதுவரை நீட் தேர்வு இரத்து செய்யவில்லை. நாம் செய்ததை தான் திமுக அரசும் செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு செல்லவில்லை. வீறு நடை போட்டது. எங்களது ஆட்சியை பார்த்து எதிர்கட்சிகள் வயிறு எரிகிறது என முதலமைச்சர் சொன்னார். ஆனால் மக்கள் வயிறு எரிகிறது.


முதலமைச்சர் சுகாதார துறை அமைச்சரிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என கேட்கிறார். கலகத்தலைவன் படத்தின் போது யாரும் வெளியே போகக் கூடாது என்று தியேட்டர்களை பூட்டி வைத்துவிட்டனர். அதனால் தான் மா.சுப்பிரமணியன் சொன்னது மாதிரி பாடலின் போது கூட யாரும் வெளியே செல்ல முடியவில்லை. மருத்துவமனைகளில் மருந்து இல்லை. நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சராக உள்ளார். 




அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத் தயார். நீங்கள் தயாரா? மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என மக்கள் பேசுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும், சட்ட ரீதியாக சந்தித்து தகர்த்தெறிவோம். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும். காவல் துறையினர் அதிமுகவினருக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும். 7 கட்சிக்கு சென்று வந்தவர் இங்கு அமைச்சராக உள்ளார். ஆட்சி மாறினால் அமைச்சர் வேறு கட்சிக்கு சென்று விடுவார். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சராக உள்ளார்கள்


சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். திமுக எதிர்கட்சியாக இருந்த போது 10 முறை ஆளுநரிடம் எங்கள் மீது புகார் கொடுத்தனர். திமுகவின் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்ததில் என்ன தவறு உள்ளது? கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். யார் தவறு செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்” எனத் தெரிவித்தார்.