அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம்,  2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.


கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டர். எஸ்.பி.வேலுமணி வீட்டில் மாலை 5.30 மணி வரை 11 மணி நேரம் இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.




இதனிடையே எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் முகாமிட்டனர்.




எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இலஞ்ச ஒழிப்பு துறை சோதனையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த வைத்த தடுப்பினை அதிமுகவினர் தூக்கி வீசியதால் பரபரப்பு நிலவியது.




இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் உட்பட 200 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சட்ட விரோதமாக கூடி போராட்டம் நடத்தியது, ஊரடங்கு உத்தரவை மீறியது, தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்பட்டது ஆகிய 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.