கோவையில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் போக்குவரத்து துறை இணை ஆணையர் காரில் இருந்து கணக்கில் வராத 28 இலட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி, ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் மூலம் பல்வேறு முறைகளில் இலஞ்சம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நம்பக்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இந்த புகாரின் பேரில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போக்குவரத்துத் துறை இணை ஆணையர் உமா சக்தியை நிறுத்தி, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 28 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் காரில் இருப்பது தெரியவந்தது. அப்பணத்திற்கு உரிய விளக்கம் உமா சக்தி அளிக்காததை அடுத்து, அப்பணத்தை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் உமா சக்தியின் அலுவலகத்திலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து உமா சக்தி மீது வழக்குப் பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் விடுமுறை தினங்கள் காரணமாக வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை சரகத்தில் 2 பேருந்துகளை ஆய்வு செய்து, அவற்றை பறிமுதல் செய்து உமாசக்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இந்த பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும் உமாசக்தி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உமாசக்தி காரில் இருந்து 28 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை இணை ஆணையர் காரில் இருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத 28 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்