வழக்கமாக திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில், மதிமுகவில் வைகோவிற்கு பிறகு அடுத்த இளந்தலைவராக உருவெடுத்துள்ள அவரது மகன் துரை. வைகோவை பிரபலப்படுத்தும் வகையில், அவரது பிறந்தநாளையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட மதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூரில் மதிமுக எழுச்சி?
இந்நிலையில், துரை வைகோவின் 52வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்செல்வன் ஏற்பாட்டில் பல்லடம் அருள்புரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி 75 நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான உயிர் காக்கும் விபத்து காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அருள்புரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் அருள்புரம் மதிமுக தோழரின் மகனுக்கு செயற்கை கால் பொருத்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்ச்செல்வன் சார்பில் ரூபாய் 70,000 க்கான காசோலையை கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் வழங்கினார். மேலும் அவைத்தலைவர் தன்னுடைய பங்காக ரூபாய் 25000 வழங்கினார். ஆகமொத்தம் மதிமுக தோழரின் மகனுடைய செயற்கை கால் பொருத்த ரூபாய் 95,000 இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
திமுக - அதிமுகவிற்கு நிகராக மதிமுகவை வளர்க்கத் திட்டம்
திருப்பூரில் திமுக, அதிமுகவிற்கு நிகராக மதிமுகவை மீண்டும் புத்துணர்வு பெறச் செய்து வளர்க்க வேண்டும் என துரை வைகோ விருப்பப்படுவதாகவும், கூட்டணியில் இருந்துக்கொண்டே கொங்கு மண்டலத்தில் அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் ஓன்று அல்லது 2 தொகுதிகளையாவது கேட்டு வாங்கி, வரும் 2026 சட்டப்பேரவையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான களப்பணிகளை அவர் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாகவே நலத்திட்ட உதவிகள், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை எம்.எல்.ஏக்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்று தீர்ப்பது உள்ளிட்ட வேலைகளை மதிமுகவினர் இறங்கியுள்ளனர்
திருப்பூர் துரைசாமி இடத்தை நிரப்பும் முயற்சி
மதிமுகவின் முன்னணி தலைவராகவும் அந்த கட்சியின் அவைத் தலைவராகவும் இருந்த திருப்பூர் துரைசாமி, சமீபத்தில் மதிமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில், திருப்பூரில் அவர் இடத்தை இட்டும் நிரப்பும் வகையில் மதிமுகவினர் செயல்படவேண்டும் என்று துரை. வைகோ கூறியிருந்த நிலையில், கே.எஸ்.தமிழ்ச்செல்வன் தலைமையில் நலத்திட்ட உதவிகள், காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.