கோவை மாவட்டத்தின் கடைக் கோடியில் கேரள மாநில எல்லையருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முருகன்பதி என்ற இருளர் பழங்குடியின கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 85 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு 5 ம் வகுப்பு படித்த பின்னர் நடுநிலைப் பள்ளிக்காக நவக்கரைக்கும், உயர் நிலைப் பள்ளிக்காக மாவுத்தம்பதிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் போதுமான சாலை வசதியும், பேருந்து வசதியும் இல்லாததால் குழந்தைகள் பள்ளி செல்வது தடைபட்டுள்ளது. மேலும் பாதியிலேயே கல்வியை கைவிட்டு விட்டு விவசாய கூலி வேலைக்கு செல்லும் அவலம் நிலவி வருகிறது.
இதுகுறித்து மாவுத்தம்பதி ஊராட்சி கவுன்சிலர் சுதாகர் கூறுகையில், “குழந்தைகள் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு நடுநிலைப் பள்ளிக்காக நவக்கரை வரை நடந்து செல்ல வேண்டும். ஆனால் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. இப்பகுதியில் உள்ள ரயில் பாதையை கடப்பதற்காக கிராம மக்கள் தங்களுடைய சொந்த நிதியை பயன்படுத்தி தனியாரிடம் நிலத்தை வாங்கி அங்கு சுரங்கப்பாதை அமைத்து சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் அப்படியே தேங்கியுள்ளதால், பள்ளிக்கு செல்வதில்லை. இருசக்கர வாகனம் உள்ளவர்கள் மட்டும் தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். முருகன்பதியில் இருந்து நவக்கரை வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சாலை வசதி மேம்படுத்தி கொடுத்து, பேருந்து வசதி செய்து கொடுத்தால் இங்கு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அக்கிராம பட்டதாரி பெண் கல்பனா கூறுகையில், “ஐந்தாம் வகுப்பு முடித்த பின்னர் சுமார் 10 வருடம் நடந்து தான் சென்று கல்வி பயின்று வந்தேன். அப்போது வனவிலங்குகள் நடமாட்டம் தொந்தரவு இல்லாததால் நடந்து சென்றோம். ஆனால் இப்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நடந்து செல்ல வேண்டும் என்ற பயத்தினாலேயே, பலர் படிக்க செல்லாமல் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பெற்றோர்களே குழந்தைகளை படிக்க அனுப்புவதில்லை. பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வரக்கூட முடியவில்லை. மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். குழந்தைகள் கல்வி பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சாலை பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவி ஹரிப்பிரியா, “ஐந்தாம் வகுப்பு முடித்த பின்னர் நவக்கரையில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ஒரு மாதம் சென்ற நிலையில், என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு விட்டேன். பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. தான் நன்கு படித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த நிலையில் பள்ளி செல்லாமல் இருக்கிறேன்” எனக் கண்ணீர் மல்க கூறினார். அக்கிராமத்தை சேர்ந்த பவித்ரா கூறுகையில், “சாலை வசதி இல்லாததால் 11ம் வகுப்பு படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். கல்வி கற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சாலை வசதி இல்லாததால் நிறைவேறாமல் போனது” என வேதனை தெரிவித்தார்.
பழங்குடியின குழந்தைகள் தடையின்றி கல்வி பயில சாலை மற்றும் பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தருமா என்பதே இப்பகுதி மக்களின் ஏக்கமாக உள்ளது.