கோவை, போத்தனூர்–செட்டிபாளையம் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று மாலை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை நிறுத்தச் சைகை காட்டியபோதும், ஓட்டுநர் அதை மதிக்காமல் வேகமாக தாறுமாறாக ஓட்டிச் சென்றார்.

Continues below advertisement

இதையடுத்து போலீஸார் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர். தப்பிக்க முயன்ற அந்த ஓட்டுநர், சாலையில் சென்ற பிற வாகனங்களுக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் ‘ரேஷ் டிரைவிங்’ செய்து பலரையும் அச்சுறுத்தினார். பின்னர் மேட்டூர் பகுதிக்குள் புகுந்து தப்பிக்க முயன்றபோது, அம்மன்புதூர் அருகே உள்ள ரயில்வே கேட் மற்றும் கான்கிரீட் தடுப்புகளில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கத்தில் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

சத்தம் கேட்டு ஓடிய பொதுமக்கள், வாகனத்தில் இருந்து தப்பியோட முயன்ற ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரிடம் விவரங்கள் கேட்டபோது, “காவல்துறை வந்துவிட்டார்களே” என்று திமிராகப் பேசியதாக கூறப்படுகிறது. இது அங்கு இருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

பின்னர் துரத்தி வந்த போலீஸாரிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். ரயில்வே கேட் சேதமடைந்ததால், ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த வாகனத்தை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போதை ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் பதற்றம் நிலவியது.