ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி மதிமுக பொருளாராக பதவி வகித்து வருகிறார். திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது, அக்கட்சியில் இருந்து வெளியேறிய 9 மாவட்ட செயலாளர்களில் இவரும் ஒருவர். பின்னர் 1998 நாடாளுமன்ற தேர்தலில் பழநி தொகுதியில் இருந்தும், 2009 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் ஈரோடு தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.


இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென இன்று அவரது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இதனிடையே கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதிமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளரான துரை வைகோ,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார். இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது. 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈரோட்டிலேயே வயிறு சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதார். ரத்தத்தில் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவார் என அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)