கோவை ராஜ வீதி தேர்நிலைத் திடல் பகுதியில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நூறாவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “கருணாநிதி அன்பழகன் மீது பற்றும், பாசமும் வைத்திருந்தார். எமர்ஜென்சி காலத்தில் திமுகவினர் மிசா கொடுமைக்கு ஆட்பட்டனர். தொண்டனுக்காகவும் துடிக்க கூடியவர் கருணாநிதி. ஸ்டாலினும் அதேபோல இருக்கிறார்.
அன்பழகன் 80 ஆண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர். அன்பழகன் பல பொறுப்புகளில் இருந்தார். சிறு குறை கூட சொல்ல முடியாத அளவு பணியாற்றினார். அவர் சமூக நீதி கண்ணாடி போட்டு பார்த்தார். பிற்கால சோழர் காலத்தில் பிரமாணர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. புராண இதிகாசங்களை வைத்து கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினர். மக்களை பிளவுபடுத்தினர். பிராமணர் அல்லாதவர்கள் படிக்க ஆதரவு இல்லாமல் இருந்தனர். வழியில்லாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதியை நடேசனார் ஆரம்பித்தார். இனம் வாழ தவிப்பவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டார்.
உயர் சாதியினரால் சர்.பிட்டி.தியாகராயர் இழிவு செய்யப்பட்டார். டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார் இணைந்து தென்னிந்திய நல உரிமை சங்கத்தை துவக்கினர். அந்த சங்கம் நம்மை காக்க துவங்கிய பாதுகாப்பு அரண். ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. நீதிக்கட்சியினர் 1920 முதல் 1937 வரை முடிசூடாத மன்னர்களாக ஆட்சி செய்தனர். நீதிக்கட்சி காலத்தில் பஞ்சமரை ஆதி திராவிடர் எனப்பெயர் மாற்றம், வகுப்புரிமை சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இந்து அறநிலைய சட்டம், தேவதாசி ஒழிப்பு சட்டம், கூட்டுறவு சங்கம், கட்டாய கல்வி, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது.
கருணாநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை தாமதமாக கொடுத்தார். ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தாமதமாக தான் கொடுத்தார். அவருக்கு கேபசிட்டி இல்லையா? பல இடங்களுக்கு சென்று பேசினார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து கொடுத்தது நமக்கு வருத்தம். இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான் அமைச்சராக இருக்க முடியும். சிறு பிள்ளையான அவர் பொறுத்துக் கொள்வார்.
தீண்டாமை, பெண்ணடிமை ஒழிக்க பெரியார் பாடுபட்டார். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என நினைத்தவர் பெரியார். நீதிக்கட்சி, திராவிடர் கழகத்தின் பரிணாம வளர்ச்சி திமுக திமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என சொன்னவர் அன்பழகன் தான். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரும் திட்டம் என்னாச்சு என கேட்கின்றனர். வெயிட் அண்ட் ஜி. திமுக வந்தால் உடனடியாக செய்ய வேண்டும் என பெண்கள் நினைக்கின்றனர். எப்போது எதை செய்ய வேண்டும் என ஸ்டாலினுக்கு தெரியும். முதலமைச்சர் கட்சி, ஆட்சியை நடத்துவதோடு மக்களை பாதுகாக்கிறார். பெண்களுக்கு கிடைக்க வேண்டியது சரியான நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும். பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்