திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை, ஆசிரியை மதமாற்ற முயன்றதாக புகார் எழுந்தது. மாணவியை திருநீறு பூசிவரக்கூடாது, இந்து கடவுள் பெயரை எழுதக் கூடாது, ஏசு நாதரை வணங்க வேண்டும் என ஆசிரியை மிரட்டியதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரித்த திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் தங்களை சமரசம் செய்ய முயன்றதாகவும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அம்மாணவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் தனது மகளும் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதால் குழந்தைகள் நல ஆணையம் இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என மாணவியின் தந்தை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் மனு அளித்தார். மேலும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன், ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும், ஆசிரியை மதமாற்றம் செய்ய முயன்றதான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்பட்ட புகார் தவறான புகார் எனவும், வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தெரிவித்தார். இதனிடையே இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், இறுதி வரை தங்களிடம் சமரசம் பேசவே முயன்றதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படவில்லை எனவும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்