கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு 3 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், மது பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல இடங்களில் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். குடிப்பதற்காகவும், அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ப்பதற்காகவும், டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. கோவை மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கொள்ளை நடந்துள்ளது.
கோவை விமான நிலையம் பின்புறம் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் 27 ம் தேதி இரவு அக்கடையின் சுவரில் துளையிட்டும், முன் பக்க கதவின் பூட்டை உடைத்தும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபானக் கடைக்குள் நுழைந்தனர். 3 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 57 ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் திருடி சென்றுள்ளனர். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அக்கடையின் சூப்பர்வைரசர் சுகுமாரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகுமாறன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் பீளமேடு குற்றப் பிரிவு காவல்துறையினர் மதுபானக்கடையில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.