கோவையில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையங்களை டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார். இதேபோல போத்தனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மகளிர் காவல் நிலையத்தை டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் உள்ளன. மகளிர் காவல் நிலையங்கள் 202 மட்டுமே இருந்தது. ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் ஒரு மகளிர் காவல் நிலையம் முதலமைச்சர் அனுமதி அளித்தார்‌. அதன்படி 1574 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது. 


கோவை போத்தனூர் பகுதியில் புதிய மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. போத்தனூர் பகுதியில் உள்ள பெண்கள் குறைகள் மற்றும் அநீதிகளை முறையீடு செய்யலாம். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். புகார் அளிக்க பெண்கள் சிட்டிக்கு செல்ல வேண்டியதில்லை. கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை மாநகர காவல் துறையை வலு சேர்க்கவும், விரிவாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி கோவையில் 3 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் பகுதிகளில் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையில் இணைக்கப்படும். மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்கள் 20 காவல் நிலையங்களாக அதிகரிக்கப்படும். இதனால் காலப்போக்கில் மாநகரில் குற்றங்கள் குறையும்.


இணைய வழி குற்றங்கள் பொருத்தவரை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். மக்கள் எளிதில் ஏமாறுவது சைபர் கிரைமில் தான். மொபைல் போன் உள்ளவர்கள் இந்தியாவில் வேறு மாநிலங்களில் இருந்தும், இந்தியாவிற்கு வெளியே இருந்தும் ஏமாற்றலாம். டெலிகிராமில் அதிக வட்டி தருவதாக முதலீடு செய்ய வைத்து மொத்தமாக ஏமாற்றும் நபர்கள் அதிகரித்துள்ளனர். பணத்தை இழந்த நபர்கள் 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், இன்னொரு வங்கிக்கு பணம் செல்வதை தடுக்க முடியும். அமெரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில் மோசடி கும்பல்கள் உள்ளன.‌ அவர்களை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி தேவை. வெளிநாட்டு குற்றவாளிகளை பிடிப்பது சவாலானது. எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. எல்லா மாநகரிலும் சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது.


காவல் உதவி என்ற ஆஃப் பயனுள்ள ஆஃப்பாக உள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். இதில் பெண்கள் பாதுகாப்பிற்கு பல வசதிகள் உள்ளது. ஆனால் இந்த ஆப்பை பல மக்கள் பதிவிறக்கம் செய்யவில்லை. 2011 ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 1060 உதவி காவல் ஆய்வாளர்கள், 130 ஆய்வாளர்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும். 3, 4 ஆண்டுகளாக காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படவில்லை. வெகன்சி வரும் போது அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண