கோவை சாய்பாபா காலனி பகுதியில் பழைய சோறு.காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பா.ஜ.க உள்ளாட்சி மேம்பாட்டு துறை மாநில செயலாளராக இருந்து வந்தார். இவரை கடந்த 21 ம் தேதி கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருந்தது.


இந்நிலையில் அண்ணாதுரை இன்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அகற்றி விட்டு சேவை மையம் என போர்டு வைத்து இருப்பதாக கூறி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 




பழைய சோறு.காம்:


பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.கவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவில் மாநிலச் செயலாளராக இருக்கிறேன். இனிமேல் அந்த பொறுப்பில் இருப்பேனா என தெரியாது. பழையசோறு.காம் என்ற பெயரில் சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் உணவகம் வைத்துள்ளேன். கோவையில் எனக்கும் உணவகத்தின் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.


பா.ஜ.க கட்சியில் இருப்பதால் வீட்டின் உரிமையாளர், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறார். இதனையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை  கோவை  மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு போன் செய்து கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அகற்ற சொல்லி இருக்கிறார். அதன் பேரில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தலைமையில் கட்சி நிர்வாகிகள் பழையசோறு.காம் உணவகத்திறகுள் நுழைந்து பொருட்களை திருடி விட்டு, அந்த கட்டிடத்தில் பாஜக கொடியை நட்டு வைத்து, அதில் போர்டு வைத்து  அதற்கு சேவை மையம் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.




இப்படி சேவை செய்வார்கள் என தெரிந்திருந்தால் அந்த கட்சிக்கு சென்றிருக்க கூட மாட்டேன். என்ன  நடந்தது என்பதை என்னை அழைத்து விசாரிக்காமல் கடையை காலி செய்து இருக்கின்றனர். இப்பொழுது குண்டர்களை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வேறு வழி இல்லாமல் இப்பொழுது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். உணவகத்தின் உள்ளே இருக்கும் குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் எனக்கும் கட்டிட உரிமையாளருக்கும் இடையே வழக்கு  இருக்கும் பொழுது, அதற்குள் நுழைந்து எப்படி என்னுடைய பொருள்களை எடுத்துச் செல்ல முடியும்? கட்சியில் இருந்து என்னை  நீக்கியதாக நேற்று சொன்னார்கள். எப்படி நீக்கினார்கள் என தெரியவில்லை. நீக்கியதாக அதிகார்வபூர்வமாக  இதுவரை எந்த தகவலும் எனக்கு வரவில்லை. 


அண்ணாமலை மீது புகார்:


இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் நேரடியாக தலையிட்டு இருக்கிறார். அவர் மீதுதான் புகாரை கொடுத்திருக்கிறேன். அண்ணாமலை மீதும், மாவட்ட தலைவர் பாலாஜி மீதும் அவருடன் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மாநில தலைவர் என்னிடம் பேசும் போது, உடனடியாக காலி செய்யவில்லை என்றால், டிஜிபியிடம் சொல்லி காலி செய்ய வைப்போம் என அண்ணாமலை சொல்லியதாக என்னிடம் தெரிவித்தார்.


கோவையில் தொழில் பண்ண விடாமல் கட்டிட உரிமையாளர் டிஸ்டர்ப் பண்ணிகொண்டே இருந்ததால் கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பா.ஜ.க மாநில தலைவர் மீது புகார் கொடுத்து இருப்பதால், என் மீது இனி  எல்லா பொய் புகாரும் கொடுப்பார்கள் என தெரியும். அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன். கடையில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  என்ன ஆனது என தெரிவில்லை. கடந்த  23ஆம் தேதி காலை 8 மணிக்கு உணவகத்தை உடைத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.




இந்நிலையில் அண்ணாதுரை மீது கட்டிடத்தின் உரிமையாளர் பழனிசாமி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் பூர்ணிமா கூறுகையில், “அண்ணாமலை 7 மாதங்களாக வாடகை தரவில்லை. இது குறித்து சாய்பாபாகாலணி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, 3 மாதத்தில் காலி செய்வதாக கூறினார். தற்போது அவரே காலி செய்து விட்டார். அவர் கூறுவது போல எங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் இல்லை. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அவர் மீது புகார் உள்ளது. சென்னையிலும் வாடகை தராமல் இருந்ததாக புகார் உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், எங்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் மாநில நிர்வாகியே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.