கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு சென்ற பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கியதையடுத்து, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பயம் தரும் வெள்ளியங்கிரி ஏற்றம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (60) என்பவர் நேற்று நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறச் சென்றுள்ளார். முதல் மலையை ஏறும் போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் டோலி தூக்கும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு டோலி மூலம் பூண்டி அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சமீப காலமாக வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மலையேறும் பக்தர்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.