கோவை பூமார்க்கெட் அருகேயுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் இயங்கும் ஈஷா யோக மையத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், ஜக்கி வாசுதேவின் மனைவி மரணமே மர்மம் தான் எனவும், பயிற்சிக்கு வந்தவர்களுக்கு சந்நியாசம், நில அபகரிப்பு, குழந்தைகளுக்கு போதை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஈஷாவில் பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ என்ற பெண் 18ம் தேதி மாயமான நிலையில் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியானது எனவும், கடந்த 1ம் தேதி கிணற்றில் இருந்து சுபஸ்ரீ உடல் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டு விடுமுறை தினத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார். 


சுபஸ்ரீயின் கணவரை அழைத்து ஜக்கி வாசுதேவ் உட்பட ஈஷா அமைப்பினர் பேசியுள்ளனர் எனக்கூறிய அவர், இதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஈஷா நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்வது மரபு அல்ல எனவும், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் எந்த மத நிகழ்விலும் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் பாஜக தேசிய தலைவர் வந்து செல்கிறார் எனவும், ஒன்றிய அரசுடன் செல்வாக்கான இணக்கம் உள்ள அமைப்பில் நடந்துள்ள மரணம் தொடர்பாக காவல் துறை மென்மையான போக்கை கடைபிடிக்கிறது எனவும், எனவே ஜக்கி வாசுதேவ் சாமியாரை காவல் துறை நேரடியாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஈஷா மையத்தை மூடிவிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இதனை வலியுறுத்தி வரும் 6ம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார். 2018ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவசர கதியில் அறிவிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர் எனவும், ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிக்க உரிமை உள்ளதா என்பது தொடர்பாக மட்டும் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் முழுமையாக வெள்ளையாக்கப்பட்டுள்ளது எனவும், இன்னும் கள்ளநோட்டுக்கள் பணம் புழக்கத்தில் உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் இந்த அறிவிப்பால் சாமானிய மக்கள் தான் பாதிக்கப்பட்டனர் எனவும் வங்கி ஊழியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண