கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி, வயது (42). இவரது அண்ணன் மகாலிங்கம். இவர்கள் இரண்டு பேரின் வீடும் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகிய நிலையில், இருவரின் மனைவியும் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர் இதனால் இவர்கள் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கத்தின் தங்க நகை அடகு வைத்து இருவரும் ஒன்றாய் தேங்காய் வியாபாரம் செய்து வந்தனர். தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.




அது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் வீட்டில் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கிரிக்கெட் மட்டையால் அண்ணன் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம்  இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தம்பி ஆறுசாமியை துரத்திச் சென்று வடபுதூர் பஸ் நிறுத்தம் அருகே ஆறுச்சாமி வயிற்றில் வலது பக்கத்தில் கத்தியால் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து மகாலிங்கம் தலைமறைவானார். 


இதில் சம்பவ இடத்திலேயே ஆறுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர், ஆறுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் வைத்து மகாலிங்கத்தை கைது செய்தனர். கிணத்துக்கடவு பகுதியில் வியாபார நஷ்டத்தில் தம்பி அண்ணன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் இருவர் உயிரிழப்பு


கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதியினர் பூளுவாம்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன், தேவி இருவரும் துப்புரவு பணிக்குச் செல்ல இன்று காலை சிறுவாணி சாலையில் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆலாந்துறை அரசு பள்ளி அருகே வந்த போது, அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராஜேந்திரன், தேவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 




சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பேருந்துடன் சரணடைந்தார். இந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண