கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்தினா கொடுத்த புகாரின் பேரில், மேல் குன்னூர் காவல் துறையினர் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.




இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் வெலிங்டன் இராணுவ மையம் சார்பில் அமைக்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாத காலமாக நினைவு தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. அந்த நினைவு தூணில் பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்களும், ”ஆன்மா அழியாதது, எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது, தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் அதை உலர்படுத்த முடியாது" என்கிற பகவத் கீதையின் வாசகமும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் இரண்டாம் ஆண்டு நினைவை தினத்தை முன்னிட்டு, இன்று நினைவுத் தூண் திறக்கப்பட்டது. குன்னூர் வெலிங்கடன் இராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூண் பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.