கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கனமழை காரணமாக குளங்கள் நிரம்பி, சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.




இந்நிலையில் நேற்று இரவு முதல் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள அன்னூர் குளம், ஒட்டார் பாளையம் குளம், ஊத்துப்பாளையம் குளம், கஞ்சப்பள்ளி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியது. குளங்கள் நிரம்பியதன் காரணமாக அதிலிருந்து வெளியேறும் நீர் அன்னூர் - சத்தியமங்கலம் சாலையில் மழை நீர்  ஓடுகிறது. இதன் காரணமாக இந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளதுடன், குளத்தில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருப்பதன் காரணமாக அன்னூரில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கோவை நகரில்  காலை முதல் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கனமழை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.