கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில் பட்டமும் பெற்றனர். மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

Continues below advertisement

இதனிடையே நீட் மற்றும் மாநில அரசின் பொது பாடத்திட்டம் போன்றவற்றில் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி  இருந்து வருகின்றார். இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியது இல்லை என இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆளுநர் ரவி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பொது பாடமுறை குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேச திட்டமிட்டு இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு விருந்தினரான சஞ்சீவ் சன்யாலலை மட்டும் பேச அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை பேச அழைக்கவில்லை.

Continues below advertisement

தமிழ்நாடு ஆளுநரும் பேசாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பட்டங்களை மட்டும் வழங்கிவிட்டு கிளம்பி சென்றனர். கடந்த ஆண்டு பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும் போது,  எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கின்றோம், அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும், சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழியான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இந்தி திணிப்பிற்கு அறிஞர் அண்ணா சொல்லிய குட்டிய கதையை கூறிய அமைச்சர் பொன்முடி, இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தது அப்போது சர்ச்சையாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நீட் விவகாரம், பொது பாடத்திட்ட விவகாரம் என ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு பேசுவதற்கான வாய்ப்பை ஆளுநர் கொடுக்காமல் தட்டி கழித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்குமான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்த இச்சம்பவத்தினால் பரபரப்பு நிலவியது. இந்த பட்டமளிப்பு விழா காலை 10.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அரங்கிற்குள் மாணவர்கள் 9 மணிக்கே அமர வைக்கப்பட்டனர். ஆனால், ஆளுநர் காலதாமதமாக 11.40 மணிக்கு விழாவில் பங்கேற்றதால், பட்டம் பெற வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆளுநர் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் மற்றும் ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டபட்டது குறிப்பிடத்தக்கது.