கோவையில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடிக்கு கீழ் ‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பதாகை வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்திய நாட்டின் 75 ஆண்டு நிறைவு சுதந்திர தின விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண தேசியக்கொடி என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15 ம் தேதி வரை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
கோவை மாவட்டத்திலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மச்சாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் முடிவடைந்த பின்னரும் அந்தக் கொடி அகற்றப்படாமல் உள்ளது. தேசியக் கொடியின் கீழ் ‘யேசுவை இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இருந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் வகையிலும், மதப்பிரச்சாரம் செய்யும் வகையிலும் செயல்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். பாஜக கோவை மாநகர சுந்தராபுரம் மண்டல தலைவர் முகுந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “மச்சாம்பாளையம் வாரண்ட் ஆபீஸ் வீதியில் சண்முகம் என்பவரது வீட்டில் முன்பு ஒரு கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடாமல் ஒரு பதாகையில் பொருத்தப்பட்டு இருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட காலண்டர் அட்டையில் தேசியக் கொடி பின் செய்யப்பட்டு இருந்தது. அதன் முன்புறம் ‘ஏசுவே என் இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகத்துடன் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காரில் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தேசியக் கொடியை அவமதித்த சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது தேசியக்கொடி அவமதிப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சுதந்திர தினம் முடிவடைந்தும் தேசியக்கொடியை அகற்றாமல் பறக்க விட்டு அவமதிப்பு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் தேசியக்கொடி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்