கோவையில் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக 721 ரூபாய் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், கடந்த 3ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் 3500 தூய்மை பணியாளர்கள் உட்பட 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும், கழிவுகளும் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கோவை மாநகராட்சி கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் கூலி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி கோவை மாநகராட்சி கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் கூலி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீர்மானத்தில் கூலி உயர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாமல் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத காரணத்தில் நகரப் பகுதிகள் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கோவை மாநகராட்சியில் பணி புரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் மட்டும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாநகராட்சி உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், இந்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்