கோவை - அபுதாபி இடையே இன்று முதல் விமான போக்குவரத்து துவங்கிய நிலையில், அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். இதனிடையே தொழில் நகரான கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் சர்வதேச விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.




விமானத்திற்கு வரவேற்பு


இதனிடையே கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து  துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவையானது வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை - அபிதாபி இடையே இன்று முதல் விமான சேவை இன்று துவங்கியுள்ளது. அபுதாபியில் இருந்து கோவைக்கு இன்று காலை 163 பயணிகளுடன் இன்டிகோ விமானம் இன்று காலை வந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.


தொழில் துறையினர் வரவேற்பு


இதனைதொடர்ந்து இன்று காலை 7. 40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது. கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவையானது வழங்கப்பட இருக்கிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும். வாரத்தில் 3 நாட்கள் அபுதாபிக்கு விமான சேவையினை இன்டிகோ நிறுவனம் வழங்க இருக்கின்றது. இது கோவையில் இருந்து இயக்கப்படும் மூன்றாவது சர்வதேச விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை துவங்கியிருப்பது கோவை தொழில் துறையினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  இதேபோல பிற நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்கள் இயக்க வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.