கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஓரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையை அடுத்த தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரொனா தடுப்பு கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாளையார் சோதனை சாவடியில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார். மேலும் கேரளாவில் இருந்து வந்த பயணிகளிடம் சான்றிதழ்களை சோதனை செய்தார்.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகமாக இருக்கின்றது. இதனையடுத்து அம்மாவட்டங்களை ஒட்டியுள்ள கோவையில் எல்லையில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் போதுமான ஆவணங்கள் வைத்திருக்கின்றனர். அதே வேளையில் போதுமான ஆவணங்கள் இல்லாமல் வரும் நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அவசரத் தேவையெனில் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை பரவல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரொனா தொற்று விகிதம் லேசாக உயரந்துள்ளது. இது அதிகமாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகும். இதனை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு அனுப்ப பாலக்காடு, மலப்புரம் மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கேரளாவில் முதல் ஊசி கேரளாவில் போட்டு இருந்தால், இரண்டாவது தவணை இங்கு கல்லூரிகளில் போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் அரசு சார்பிலும் மற்றவை தனியார் மருத்துவமனை, சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இது வரை முதல் தவணை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருக்கின்றது" என அவர் தெரிவித்தார்.