கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நீர் நிலைகள், சாலைகளில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட கண்காணிப்பாளர்கள் தாரஸ் அகமது, வன்னிய பெருமாள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாலாங்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ” வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் சார்பில் இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரிய குளங்கள், முக்கிய நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.


இதைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை கண்காணிப்பாளர்கள் பார்வையிட உள்ளோம். வானிலை ஆய்வு மையம் கோவைக்கு  ஆரஞ்சு அலர்ட் வழங்கிய நிலையிலும், எதிர்பார்த்த மழை இல்லை. இருப்பினும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.




நொய்யல் ஆறு மூலம் தண்ணீர் பெறும் 25 குளங்களில் 23 குளங்கள் 100% தண்ணீர் நிரம்பி உள்ளது. குளங்களில் நிறைந்து வெளியேறும் உபரி நீர் மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்க செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஆழியாறு மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து வரும் நீர் தாழ்வான பகுதிகளில் தேங்க வாய்ப்புள்ளதால், அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கும் நீரை கண்காணிக்கவும், அகற்றவும் மாநகராட்சி ஊழியர்களுடன் நெடுஞ்சாலைத் துறையினரும், குளங்களை கண்காணிக்க பொதுப்பணித் துறையினரும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காவல் துறையினரும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


சித்திரைச்சாவடி அணை, பில்லூர் அணை, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் குளிக்கவோ அல்லது செல்பி எடுக்கவும் சென்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளதால், அவர்களை கண்காணிக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/2TMX27X


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


https://bit.ly/3AfSO89


ட்விட்டர் பக்கத்தில் தொடர
https://bit.ly/3BfYSi8


யூடிபில் வீடியோக்களை காண
https://bit.ly/3Ddfo32