தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை


இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். இதேபோல நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




கொட்டிய கனமழை


கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் பரவலாக கனமழை பெய்துள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் அதி கனமழையும், வால்பாறை, சிங்கோனா, சோலையார் ஆகிய பகுதியில் கனமழையும், பீளமேடு,சிறுவாணி அடிவாரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 15.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது‌. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.


இதேபோல தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர் மட்டம் நேற்று 2 அடிக்கு அதிகரித்து 40.54 அடியாக உயர்ந்துள்ளது. 45 அடி வரை இந்த அணையில் தண்ணீர் தேக்க முடியும் என்பதால், விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வெயில் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.