கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 120 அடி கொண்டதாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காடம்பாறை அனைத்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து காடம்பாறை அணையில் இருந்து அப்பர் ஆழியாரில் இருந்து 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்தால் பாலம் மூழ்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால் ஆழியார் அணையில் 5 அடி தண்ணீர் அதிகரித்து, தற்போது 95.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் மூன்று அடிக்கு மேல் உயர்ந்து இருக்கின்றன. 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், தற்போது நீர் மட்டம் 38.67 அடியாக உள்ளது. நான்கு வாரங்களில் 27.5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்வதால் அணையின் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement