மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக விளங்கி வருகின்றன.  இம்மாவட்டங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்  எளிதாக சென்று வர ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த கட்டணம், எளிதாக வந்து செல்லும் வசதி, குறுகிய நேரத்திற்குள் சென்றடைதல் உள்ளிட்ட காரணங்கள் அவர்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்க காரணங்களாக உள்ளது.




கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, வழியாக சேலம் வரை செல்லும் இரயில்கள் 22 சிறிய இரயில் நிலையங்களில் நின்று சென்று வந்தன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பாலக்காடு - திருச்சி இரயில், கோவை - நாகர்கோவில் ரயில், கோவை - சேலம்  இரயில் ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இருந்த இந்த ரயில் சேவைகள் மீண்டும் துவங்கிய நிலையில், ரயில்கள் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


முக்கியமான பெரிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த ரயில்கள் சிங்காநல்லூர், இருகூர், சோமனூர், வஞ்சிபாளையம் உள்ளிட்ட சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. இதனால் அந்த ரயில்களை நம்பி வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காததால், பீளமேடு இரயில் நிலையம் வரை சென்று ரயில்களில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரயில்கள் இயக்கும் நேரங்களும் மாற்றப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அந்த ரயில்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




இது குறித்து ரயில் பயணியான வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ”நான் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சிங்காநல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து ரயில்களில் திருப்பூர் சென்று திரும்பி வருவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பிறகு சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் என்னைப் போன்ற திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் சென்றடைய ரயில் பயணம் மட்டுமே சரியாக தேர்வாக இருந்து வந்தது.


தற்போது பீளமேடு ரயில் நிலையம் சென்று ரயில் ஏறுதல் அல்லது பேருந்தில் பயணம் செய்தல் ஆகியவைக்கு கூடுதல் செலவு, நேர விரயம், அலைச்சல் ஆகியவை ரயில் பயணிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருவதால் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில் பயணிகளும் பயனடையும் வகையில் பழையபடி அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லவும், உரிய நேரத்தில் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.