கோவை மாவட்டம் அன்னூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 47 வயதான இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி (42). இத்தம்பதியினருக்கு தர்ஷனா என்ற பத்து வயது மகள் இருந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வசந்திக்கும், தர்ஷனாவுக்கும் திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது சுப்பிரமணி வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால், வசந்தி தனது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ் என்பவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து வசந்தியும், தர்ஷனாவும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் ஓதிமலை சாலை வழியாக வீடு திரும்பினார்கள். ராஜேஷ் இரு சக்கர வாகனத்தஒ ஒட்டி வந்த நிலையில், பின்னால் வசந்தியும், அவர்களுக்கு நடுவில் தர்ஷனா இருந்துள்ளனர். 3 பேரும் அன்னூரை கடந்து ராம்நகர் என்ற இடத்திற்கு வந்த போது திடீரென்று தர்ஷனா கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டா, இரு சக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி மாட்டிக் கொண்டது. இதனால் கழுத்து இறுகி தலை தனியாக துண்டாகி சாலையில் விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தி அலறினார். உடனடியாக ராஜேஷ் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதும் வசந்தி ஓடிச் சென்று பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்முன்பே துப்பட்டா சிக்கியதால் மகளின் தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்