கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகம்மா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். 19 வயதான இவர் அன்னூர் இந்து முண்ணனி நிர்வாகியாகியான குட்டி என்கிற ராஜேந்திரனிடம் பைனான்ஸ் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து வந்து சமீப காலமாக தனியாக சீட்டு நடத்தும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்செல்வன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சீட்டு பணம் கொடுத்திருந்த நிலையில், சீட்டில் பணம் எடுத்து விட்டு தமிழ்செல்வன் பணம் தராமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணசுந்தரத்திற்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 27 ம் தேதியன்று அன்னூரை அடுத்த மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை, தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரான ராஜராஜன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சரவண சுந்தரத்தின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வெட்டிய இருவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சரவண சுந்தரத்தை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சரவண சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த கொலை தொடர்பாக தமிழ்செல்வன் மற்றும் அவனது நண்பன் ராஜராஜன் ஆகிய இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தமிழ்செல்வனும், ராஜராஜனும் தற்போது இந்து முன்னணி அமைப்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றியதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய அன்னூர் காவல் துறையினர் குட்டி என்கிற ராஜேந்திரன் மற்றும் அவருக்கு உதவிய ரங்கநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் அன்னூர் பகுதியில் தலைமறைவாகி பதுங்கி இருந்த நிலையில், இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்கு கொலை, கூட்டுசதி செய்தல் என இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.