கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் சஞ்சய். இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபோமங்ஷி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 12-ந் தேதி சுபோமங்ஷி, மற்றொரு கடையில் வேலைக்காக கொடுத்திருந்த 10 பவுன் நகையை வாங்கி கொண்டு பட்டறைக்கு வந்து கொண்டிருந்தார்.

Continues below advertisement

அப்போது அவரை 4 பேர் வழிமறித்து, அவரிடம் இந்தியில் நைசாக பேசினர். உங்கள் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனை தீர்க்க பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதை சுபோமங்ஷி கேட்டு கொண்டிருந்தபோது, அவரின் முகத்தில் விபூதி கலந்த தண்ணீரை தீர்த்தம் போல தெளித்தனர். பின்னர் அவரிடம் இருந்து நகையை வாங்கி கொண்ட 4 பேர், சிறிது தூரம் நடந்து சென்று வாருங்கள் என கூறவே, சுபோமங்ஷி அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, 4 பேரும் அங்கு இல்லை. அப்போதுதான் தன்னை ஏமாற்றி 10 பவுன் நகையை பறித்து சென்றதை உணர்ந்தார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் உரிமையாளர் சஞ்சய்க்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர், இதுபற்றி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் 2 ஆட்டோக்கள் மூலம் மாறி சென்று, மராட்டியம் மாநில பதிவெண் கொண்ட காரில் தப்பி சென்றதும், அவர்கள் நாக்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் கார்த்திகேயன் கண்காணிப்பில், உக்கடம் சரக உதவி கமிஷனர் முருகேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நாக்பூர் விரைந்து சென்று ஒரு வாரம் தங்கி இருந்து கொள்ளையர்களின் நடவடிக்கையை கண்காணித்தனர். பின்னர் அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான நாக்பூர் யார்கடா பகுதியை சேர்ந்த யாஷிம் அலி (வயது 27), குர்பானிக் (27), முகமது பாரித் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்ட சலீம் அலியை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைதானவர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த கொள்ளையர்கள் வடமாநிலத்தில் வசிக்கும் ஈரானி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் இதுபோன்று வடமாநில நகை ஊழியர்களை குறி வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், டெல்லி, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியிருப்பதும், நாடு முழுவதும் அவர்களை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது. கோவைக்கு வந்த அவர்கள், பல நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று நகை கொண்டு சென்ற போது, குடும்பத்தில் பிரச்சினை இருப்பதாகவும், அதனை தீர்க்க பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறி நூதன கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.