கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. கோவை குற்றாலம் மற்றும் நொய்யல் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதேபோல கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் 44 அடியை கடந்துள்ளது. நேற்றைய தினமும் விட்டு விட்டு கன மழை பெய்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வட கிழக்கு பருவ மழை இருக்கும். இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலாக பெய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை கால நிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு அதிக அளவு வட கிழக்கு பருவ மழை பெய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அக்டோபர் மாத சராசரி மழை அளவு 189.9 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம்  பெய்த மழையின் அளவு 190.6 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.




இதே போல கடந்த 30 ஆண்டுகளில் நவம்பர் மாதம் பெய்த மழையின் சராசரி அளவு 143.9 மில்லி மீட்டர். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 271.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை காட்டிலும் 90 சதவீதம் அதிகமாகும். கோவை மாவட்டம் வட கிழக்கு பருவ மழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெறும் சராசரி மழை அளவு 363.4 மில்லி மீட்டர். ஆனால் கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் பெய்த மழை அளவு 462.5 மில்லி மீட்டர். இன்னும் டிசம்பர் மாதம் மழை பெய்ய வேண்டியுள்ளது. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 2 மாதங்களில் சராசரியை விட 99 மில்லி மீட்டர் மழை அதிகமாக பெய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண