கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றும் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.


கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறையில் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கவி அருவிக்கு  நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் வரக்கூடும் என்பதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் மற்றும் வால்பாறை சின்னக்கல்லார், சோலையார் உள்ளிட்ட போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.




போக்குவரத்து பாதிப்பு


தொடர் மழை காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வரும்போது, சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவனமாக வாகனங்களில் வரவேண்டும் எனவும் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் அறிவுறுத்துள்ளனர் இந்த நிலையில் இன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள 16வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் வந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் சாலையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள் விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


இதேபோல பொள்ளாச்சி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கணபதி நகரில் சாலை நீரில் மூழ்கியது. நீரை வெளியேற்ற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ள நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.