தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கோவைக்கு இன்று மாலை வருகை தர உள்ளார். நாளை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து 25 ம் தேதியன்று திருப்பூரில் நடக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் கள்ளிப்பட்டியில் நடைபெறும் கட்சி விழாவில் பங்கேற்கிறார். 26 ம் தேதியன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கோவை தனியார் கல்லூரியின் 75 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் 26 ம் தேதியன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.  



முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளில் சாலைகளை செப்பனிடுதல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் உள்ள சுவர்களில் முதலமைச்சரின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை வண்ண ஓவியங்களாக வரையும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல முதலமைச்சர் பொள்ளாச்சி செல்லும் ராமநாதபுரம் - போத்தனூர் சாலையில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைத்தல், சாலைகளை செப்பனிடுதல், தூய்மைப்படுத்துதல், சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் வண்னம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.




இதேபோல கரும்புக்கடை பகுதியில் குண்டும், குழியுமாக இருக்கும் மேம்பாலம் பணிகள் நடக்கும் சாலை செப்பனிடப்பட்டுள்ளது. சுங்கம், உக்கடம் சாலையில் பேட்ச் வொர்க் செய்யப்பட்டுள்ளது. சாலைகள் செப்பனிடப்படுவதோடு, சுத்தமாக்கப்படுவதால் வாகன ஒட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.




இந்நிலையில் ராமநாதபுரம் - போத்தனூர் சாலையில் மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்கான சீரமைப்பு பணிகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் அச்சாலையில் ஒரு பக்கம் மட்டுமே, சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கண் பார்வையில் படும் ஒரு பக்கம் மட்டுமே வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், மறுபக்கம் வண்ணம் பூசப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகம் முதலமைச்சர் வருகைக்காக கண் துடைப்பிற்காக இப்பணிகளை செய்துள்ளதாகவும், முழுமையாக பணிகளை செய்யாமல் அறையும், குறையுமாக அவசர கதியில் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இப்பணிகளை முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண