கோவையில் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள் பறிமுதல் ; இருவர் கைது

இருவரும் உயர்ரக போதைப் பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டுவந்து, சுற்றுவட்டார பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

Continues below advertisement

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை காவல் துறையினர் குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து வந்த போது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெரிதுல் இஸ்லாம் (33) என்பது தெரியவந்தது.  சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் அவரிடம் சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 12 கிராம் எடையுள்ள ஐந்து பாக்கெட்டுகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்து, கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவது தெரியவந்தது.

Continues below advertisement

இஸ்லாம் அளித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குதர்ஷா கத்துல் (35) என்பவரின் வீட்டினை சோதனை செய்தனர். அதில் அவரது வீட்டில் இருந்து 12 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட்டுகளில் சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் உயர்ரக போதைப் பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டு வந்து, சுற்றுவட்டார பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், இருவரிடம் இருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நீதிமன்ற காவலில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தாண்டில் கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 517 நபர்கள் மீது 390 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 685 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க கோவை - பாலக்காடு சாலையில் மதுக்கரை மரப்பாலம் அருகே வாகன தணிக்கை செய்து  கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் சுமார் 50 கிலோ வீதம் 12 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த விஜய் (29) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது குனியமுத்தூர், மைல்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஈச்சனாரியை சேர்ந்த பிரதீப் என்பவரிடம் கொடுத்து, ஈச்சனாரியில் உள்ள பிரபல கம்பெனியில் வேலை செய்யும் வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஜயை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரதீப் என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி  வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola