கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 2 இலட்ச ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோமனூர் நகராட்சி அலுவலகம் அருகே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பீகாரைச் சேர்ந்த மகேஷ்குமார் (33) என்பவர் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்குமாரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடமிருந்த 2 இலட்ச ரூபாய் மதிப்பிலான 22.500 கிலோ கிராம் எடையுள்ள சுமார் 4000 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் தனிப்படை காவல் துறையினர் கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மகேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்