கோவை வடவள்ளி பகுதியை சார்ந்தவர் ஷர்மிளா. 23 வயதான இவர், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரைப் பற்றிய செய்திகள் சமூக தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் ஷர்மிளாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அதன்படி பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர், வேலையை விட்டு நீக்கியதாக ஷர்மிளா தெரிவித்தார். ஷர்மிளாவே வேலையை ராஜினாமா செய்ததாக பேருந்து உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக ஷர்முளா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஹர்மிளாவிற்கு 16 இலட்ச ரூபாய் மதிப்பிலான புதிய கார் ஒன்றை வாங்கி தந்தார். இதன் காரணமாக ஷர்மிளா இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார். ஷர்மிளா தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கனூர் பகுதியில் ஒரு பெண் காவலர் வாகனங்களை வழிமறித்து இலஞ்சம் வாங்குவதாகவும், அவர் மீது காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷர்மிளா வெளியிட்டு இருந்தார்.


இந்நிலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளாராக பணி புரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவர் ஷர்மிளா மீது சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த 2ம் தேதியன்று தான் சங்கனூர் சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த போது, காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து கேள்வி கேட்டதால், தன்னை வீடியோ எடுத்து ஷர்மிளா மிரட்டல் விடுத்தாகவும், பின்னர் ஷர்மிளாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பியதாகவும் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.