கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் தேடியதில் டெலிகிராம் மூலமாக வந்த ஒரு லிங்கினுள் சென்றுள்ளார். அப்போது சிறிய டாஸ்க்கள் செய்து கொடுத்து, அதன் மூலம் சிறுதொகையை முதலீடாக பெற்றுள்ளார். இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்துள்ளார். டாஸ்க்கில் செல்வதற்காக 13 பரிவர்த்தனைகள் மூலம் 10 இலட்சத்து 90 ஆயிரத்து 690 ரூபாய் பணம் செலுத்தி, அதிக வருமானம் பெறலாம் என்று நம்பியுள்ளார். ஆனால் முறைப்படி பணம் வராததால் சந்தேகம் அடைந்த அவர், விசாரித்த போது தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து சிங்காரம் கோவை மாவட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்காரம் பணம் செலுத்திய வங்கி கணக்குகளில் இருந்த 43 இலட்சத்து 99 ஆயிரத்து 711 ரூபாய் பணத்தை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கம் செய்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துக்கிரம் பாரிக் (40) மற்றும் சிரஞ்சிபி ரூட் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் இந்தாண்டில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 328 நபர்கள் மீது 246 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 499.011 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்