கோவை அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவரை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள், இரண்டாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர் தங்கி இருந்த ஹாஸ்டல் அறை எண் 225க்கு சென்றுள்ளனர். பின்னர் இரண்டாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் தங்கி இருக்கும் 401 வது எண் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவரை ஆபாசமாக திட்டி தாக்கியதுடன், மொட்டை அடித்து, உதைத்தும், துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. காலை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.


மாணவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதுடன், மது குடிக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 18 வயது மாணவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர் மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். பிஎஸ்ஜி கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அக்கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.




இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து, தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி ஆகியோரையும், நான்காம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ், யாலிஷ் ஆகியோர் என 7 பேரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கல்லூரிகளில் ராக்கிங் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், கோவையின் பிரபல கல்லூரியில் ராக்கிங் விவகாரத்தால் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை மற்றும் அறிவுரை வழங்குகிறோம். வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.


அதேபோல ஒருவர் மீது வழக்கு ஆகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற முடியாது. இதனால் கல்லூரி மாணவர்கள் ராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக உள்ளது.அதனால் இதில் யாரும் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கைது குறித்து விசாரணை நடந்து கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார். ராக்கிங்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.