கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பல்வேறு போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் பலரும் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும், இதனால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து, வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் அச்சத்தை போக்கி, நம்பிக்கை ஊட்டும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். 


இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றும், கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் வட மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சிட்கோ பகுதியில் 3  வெவ்வேறு இடங்களில் அதிகாரிகள் நேரில் சென்று தொழிலாளர்களுடன் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இணைந்து சந்தித்தனர்.




கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, “3 மூன்று நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தி உள்ளோம். எந்த ஒரு பதட்டமும் தேவையில்லை என தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். அச்சம் ஏற்பட்டால் எந்தெந்த உதவி எங்களுக்கு அழைக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையை பிரசுரங்களாகவும் கொடுத்துள்ளோம். அனைத்து உதவி கட்டுப்பாட்டு அறைகளிலும் ஹிந்தி பேசத் தெரிந்த அதிகாரிகளையும் நியமித்துள்ளோம். இந்தி பேசத் தெரிந்த அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைகளின் நியமிக்கப்பட்டுள்ள தகவலையும் தொழிலாளர்களிடம் கூறியுள்ளோம். முன்னணி செய்தி நிறுவனங்களின் பெயரில் வீடியோக்களை புகைப்படங்களும் பரப்பப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.


இதையடுத்து பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ”வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக கோவையில் இன்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னணி செய்தி நிறுவனத்தில் வந்ததாக முதலமைச்சர் கூறியதாக பரப்பப்பட்ட வருகை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம். காவல்துறையினரின் தனிப்படை இது தொடர்பாக பிகாருக்கு கிளம்பி சென்றுள்ளனர். உண்மையிலேயே அந்த செய்தி தாளில் அந்த தகவல் வந்ததா அல்லது வந்ததாக வதந்தி பரப்பப்பட்டதா என உண்மை தன்மை அறிய அந்த குழு சென்றுள்ளது. 




பொய்யான தகவலை பரப்பி அவர்களை கைது செய்வது தொடர்பாகவும் அந்த குழு பீகாருக்கு சென்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளும் வதந்திகள் தொடர்பாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஹிந்தி பேசத் தெரிந்த காவலர்களும், நோடல் ஆபீசரும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகம் அமைதி தன்மையுடன் இருப்பதை உறுதி செயல் வடிவம் கொடுக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வதந்தி பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கட்டாயம் தண்டனை கிடைக்கும். 


சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் 100 சதவீதம் கைது நடவடிக்கை எடுப்போம். மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோந்து செய்து வருகிறோம். 2 ரோந்து வாகனங்கள் மற்றும் 3 பீட் வாகனங்கள் ரோந்தில் இருக்கும்.  100க்கு 99% எந்த பிரச்சனையும் இல்லை என நேரில் பார்த்து கலந்துரையாடிய வட மாநிலத்தவர்கள் கூறியுள்ளனர்.ஒரு சிலருக்கு மட்டும் சந்தேகம் இருந்தது. அதனை தற்போது களைந்து உள்ளோம்” எனத் தெரிவித்தார்.