கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள் காவல் துறை செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக 100 பேர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் உரையாடல் மூலமாக வாழ்க்கை குறிக்கோள், போதைப் பொருட்கள் தவிர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு, சட்டம் குறித்த அறிமுக விழிப்புணர்வு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. மாணவர்கள் எதிர்காலத்தில் குற்றமில்லாத வாழ்க்கை, குற்றப் பாதிப்பு இல்லாத வாழ்க்கை வாழவும் ’காபி வித் கமிசனர்’ என்ற நிகழ்ச்சி தொடர்ந்து மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்பட உள்ளது


கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 500 சிலைகள் வைக்கப்பட உள்ளன. இவ்விழாவின் போது பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் மக்கள் கொண்டாடும் வகையிலும், பொது அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்படாத வகையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1500 காவலர்கள், ஊர்காவல் படையினர் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு அமைப்பினரிடம் கூட்டங்கள் நடத்தப்பட்டு விநாயர் சதுர்த்தி அமைதியாக நடக்க ஒத்துழைப்பு தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும், பிரச்சனை ஏற்படாத வகையில் எல்லோரது நடவடிக்கை இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை உடனடியாக பாயும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச் சாவடிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் கேமராக்கள் மூலம் பதிவு செய்து பிரச்சணைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதும் கண்காணிப்பு கேமரா மூலம் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்விழா  அமைதியாக நடைபெற அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


சிங்காநல்லூர் பகுதியில் ஒருவரிடம் திருநங்கைகள் வழிப்பறி செய்தது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திருநங்கைகள் மீது பல புகார்கள் வந்ததன் அடிப்படையில் இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண