கோவையில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 28.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.


தொடர் திருட்டு:


கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த நபரை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதையொட்டி வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.


அப்போது வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பதும், இவர் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 28.5 பவுன் தங்க நகைகள், ஒன்றரை இலட்ச ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கார்த்திகேயனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.




இதேபோல மதுக்கரை பகுதியில் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் 2 பேரை கைது செய்தனர். மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) மற்றும் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பூவேடன் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண