கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்களை புனரமைத்து, மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.




அதேபோல மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாதிரி சாலைகளை அமைப்பதோடு, மக்களை கவரும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உக்கடம் குளக்கரையில் அமைக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ செல்பி பாயிண்ட், பந்தய சாலை பகுதியில் உள்ள பிரமாண்ட மீடியா டவர், குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்துக்களால் 20 அடி உயரத்தில் செய்யப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கிளாக் டவர், தேவதை செல்பி ஸ்பாட் உள்ளிட்டவை கோவையின் புதிய அடையாளங்களாக மாறி வருகின்றன.  




இந்நிலையில் கோவை மக்களுக்கு அட்வென்சர் அனுபவத்தை தரும் ஜின் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளத்தின் மேற்கு கரையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்த, நிலையில் இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செயது கேட்டறிந்தார். இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயனபாட்டிற்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இதுகுறித்து ஜிப் லைனை நடத்தும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பைசல் என்பவர் கூறுகையில், ”உக்கடம் பெரிய குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் வேறு எந்த பொது இடங்களிலும் இல்லை. சில ரிசார்ட் மற்றும் அட்வென்சர் பார்க்குகளில் மட்டுமே இருந்தாலும், இந்தளவு தொலைவு மற்றும் உயரத்தில் வேறு எங்கும் இல்லை. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்ததும் இன்னும் சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இது திறக்கப்படும். ஜிப் லைனுக்கு 150 ரூபாயும், ஜிப் சைக்கிளுக்கு 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படலாம். கட்டணம் இன்னும் ஒரிரு நாட்களில் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார். தண்ணீருக்கு மேல் 200 மீட்டர் தொலைவு செல்லும் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் ரைடு ஆகியவை பொதுமக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.