நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் கிராஃப்ட் படகு ; கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி

நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில், இந்த ரோவர் கிராஃப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியில் யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை தயாரித்து 45க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோவர் கிராஃப்ட் படகு ஒன்றை தயாரித்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படை பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. ரோவர் கிராப்ட் படகு நீரில் சீறிப் பாய்ந்ததை அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


இதுகுறித்து யூரோடெக் சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்ரதா சந்திரசேகர் கூறும் போது, "நாட்டிலேயே முதல்முறையாக நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் வகையில் ஓவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது‌. நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில், இந்த ரோவர் கிராஃப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோவர் கிராஃப்ட் புயல் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காகவும், கடலோர பாதுகாப்பு, மற்றும் கப்பற்படையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும், அவசர காலங்களில் மருத்துவ தேவைக்காகவும் பயன்படுத்த முடியும். ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் செலவாகும்" எனத் தெரிவித்தார்.

Continues below advertisement