கோவை வெள்ளலூர் பிரிவில் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாநகர காவல் துறையினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனம் நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து இந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில், காவல் துறையினர் பின் தொடர்ந்து சென்றனர். சேலம் ஆத்தூர் அருகே கர்நாடக எண் கொண்ட அந்த வாகனத்தை மறித்து காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் ரகசிய அறை அமைத்து அதில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்தனகட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை கோவை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவற்றை கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், கேரளாவில் இருந்து லாரி மூலம் சந்தன மரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாகவும், நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் வரை பின் தொடர்ந்து சென்று பறிமுதல் செய்ததாகவும் தெரித்தனர்.
மொத்தம் 57 மூட்டைகளில் 1051 கிலோ அளவிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் சத்தியமங்கலத்தில் உள்ள வனத்துறை குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், அங்கு சந்தன கட்டைகளின் மதிப்பு குறித்து அளவீடு செய்யப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். புஷ்பா திரைப்பட பாணியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்