கோவை மத்திய சிறைக்குள் கைதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு சிறை காவலர்கள் காயமடைந்தனர்.


கோவை காந்திபுரம் பகுதியில் கோவை மத்திய சிறை இயங்கி வருகிறது. இந்த சிறையில் 2300 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிறை வளாகத்தில் அவ்வப்போது கஞ்சா, செல்போன் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சிறை காவலர்கள் சிறை கைதிகளிடம் சோதனை நடத்துவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சிறைக்குள் வழக்கம் போல சிறைக் காவலர்கள் சோதனைக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டாவது வால் ப்ளாக் என்ற பகுதியில் உள்ள சிறை கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறைக் காவலர்கள் கைதிகளைத் தாக்கிய நிலையில், பதிலுக்கு சிறைக் காவலர்களை கைதிகள் தாக்கினர். இதில் நான்கு சிறைக்காவலர்கள் காயமடைந்தனர்.




காயம் அடைந்த சிறைக் காவலர்கள் ராகுல், மோகன் ராம்,பாபு ஜான், விமல்ராஜ் ஆகியோர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே சிறை வளாகத்தில் மரத்தின் மீது ஏறிக் கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரப்படுத்திய சிறை அதிகாரிகள் காயமடைந்த சிறைக் கைதிகள் தினேஷ், அய்யனார், அழகர் சாமி, ஹரிகரன், கிஷோர், அரவிந்த், உதயகுமார் ஆகிய 7 கைதிகளுக்கு சிறைச் சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனிடையே மோதல் சம்பவம் குறித்து கோவை சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சந்தீஷ் கோவை அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். சிறைக்குள் கைதிகளுக்கு ம், சிறைக் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக் கைதிகள் தாக்கியதில் சிறைக் காவலர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.