நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூடலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விஜயரத்தினம் (27 ) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்தனர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விஜயரத்தினத்திற்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனை கைதியாக விஜயரத்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதனிடையே சிறையில் இருந்த விஜயரத்தினம் காவல் துறையினர் காந்திபுரம் பகுதியில் நடத்தி வரும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி கைதி விஜயரத்தினம் பணியில் இருந்த போது, திடீரென தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அவரை தேடி வந்தனர். கூடலூர் பகுதிக்கு சென்ற அவர், கூடலூரில் உள்ள வனப்பகுதிக்குள் தலைமறைவாக இருந்து வந்தார். இதன் காரணமாக அவரை காவல் துறையினரால் தேடி பிடிக்க முடியவில்லை. காவல் துறையினர் தொடர்ந்து விஜயரத்தினத்தின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று இரவு கைதி விஜயரத்தினம் ஊருக்குள் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் விஜயரத்தினத்தை பிடித்தனர். அப்போது காவல் துறையினர் பிடியில் இருந்து விஜயரத்தினம் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது பாறையில் குதித்த போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட விஜயரத்தினத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயரத்தினம் மீது காவல் துறையினர் கூடுதலாக ஒரு வழக்கை பதிவு செய்து அவ்வழக்கிலும் அவரை கைது செய்துள்ளனர்.


பெண்ணை மிரட்டிய மாணவர் கைது


கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரியன் என்ற கல்லூரி மாணவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து, தனது மகளை கண்டித்துள்ளார். பின்னர் இருவரின் காதல் முறிவடைந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரியன் அலைபேசி மூலம் அப்பெண்ணை அழைத்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் எனவும், இல்லை எனில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள உணவகத்திற்கு சென்று பிரியன் அப்பெண்ணிடம் பேச முயன்ற போது, தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும், படிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியன் மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் பிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.